Cycle - A Small Story
சைக்கிள்
திரு. நாராயணமூர்த்தி
ராலிஸ் சைக்கிள் அப்பொழுதெல்லாம் தரமான சைக்கிள் என்று பெயர் பெற்றது. ஐநூறு ரூபாய் சைக்கிளை பத்து மாதங்கள் உள்ள தவணையில் வாங்கிய நாட்கள். தெருவுக்குத் தெரு சைக்கிள் ரிப்பேர் கடை இருக்கும். சக்கரத்திற்குக் காற்றடிக்க ஐந்து பைசா. நாமே அடித்துக் கொண்டால் இலவசம். பங்க்சர் பார்க்க நாலணா. டயருக்குள் இருக்கும் ட்யூபைக் கழட்டி உப்புத்தாள் கொண்டு ஓட்டையைத் தேய்த்து ஒரு சொல்யூஷன் தடவி விட்டு விடுவார். நமக்கு பேப்பரை கோந்து போட்டு ஒட்டும் டெக்னிக்தான் தெரியும். கோந்து காய்ந்தால் பேப்பர் ஒட்டாது. ஆனால் இந்த சைக்கிள்காரருக்கு எல்லாம் தலைகீழ். அந்த சொல்யூஷன் காயவேண்டுமாம். அரை மணி தேசகாலம் ஆன பின் நாம் நம்பிக்கையை இழந்த நேரத்தில் பழைய டியூபில் ஒரு துண்டை அழகாக வட்டவடிவிலோ, அறுகோண வடிவிலோ கலை உணர்வுடன் வெட்டி அதையும் உப்புத்தாளில் தேய்த்து, அதற்கும் சொல்யூஷன் தடவி காயவிட்டு முன்பு காய்ந்த பசையின் மீது ஒட்டுவார். என்ன ஒரு மாயாஜாலம்! சும்மா பச்சக் என்று ஒட்டிக் கொள்ளும். காற்றடித்தால் ஒரு காற்றுக் குமிழ்கூட வராது. முதன் முதலில் நம் தர்க்கம் தோற்ற இடம் அது.
வருடங்கள் செல்லச் செல்ல சைக்கிளின் மதிப்பு ஏறிக்கொண்டே போகும். "இது என் தாத்தாவின் சைக்கிள் என்று சொல்வதில் அத்தனை சந்தோஷம்".
பொதுவில் நம்மை விட ஒரு அடி உயரத்தில் இருக்கும் சைக்கிளில்தான் நாம் அதைப் பழகியிருப்போம். கீழே விழுந்து முட்டிகளைப் பேத்துக்கொள்ளாத பயல்களே கிடையாது. அத்தனையும் வீரத்தழும்புகள். விழுந்தவுடன் நாம் பட்டுக்கொண்ட காயத்தைப் பார்ப்பதை விட சைக்கிளுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்றுதான் பார்ப்போம். பெரிதாக ஏதேனும் ஆகியிருந்தால் மறுநாள் சைக்கிள் கிடைக்காது என்ற பயம்.
ஒரு வாரம் சென்ற பின் ஓரளவுக்குத் தனியே ஓட்ட வந்துவிடும். ஏற,இறங்க, பிரேக் பிடிக்க இதெல்லாம் அட்வான்ஸ்டு லெவல். அதற்கும் மேலே இரு கைகளையும் ஹேண்டில்பாரிலிருந்து எடுத்து விட்டு பேலன்ஸ் செய்து திரும்புதல் PHD லெவல்.
ஸ்பிரிங் பெல்,பார்கவர், ராக்கெட் சீட்,கைப்பிடிகளுக்குக் குஞ்சலம்,டைனமோவுடன் லைட், "அன்பே வா சரோஜா தேவி" கணக்காக அதற்கு மஞ்சள் பஞ்சுத்துணியில் சுற்றி வைப்பது, இதெல்லாம் இருந்தால் பென்ஸ் கார் வைத்திருக்கும் முதலாளி மனோபாவம் வந்துவிடும்.
வேலை கிடைத்தவுடன் முதன் முதலில் வாங்கப்படும் பொருள் அனேகமாக எல்லாருக்கும் சைக்கிளாகத்தான் இருக்கும். பிறகுதான் நல்ல பேண்ட், சட்டைகள், ரேடியோ இத்யாதிகள்.
இப்போதெல்லாம் பிள்ளைகள் கீழே விழாமலே கற்றுக் கொள்ள ஒட்டுச் சக்கரங்கள் வைத்த சிறுவர் சைக்கிள்கள் வந்துவிட்டன. ஆண்பால் பெண்பால் வித்தியாசம் இல்லாமல் எந்த சைக்கிளுக்கும் பார் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த சைக்கிளையும் வாங்கலாம். இரட்டை லேடிபேர்டு சைக்கிளை எங்கேயும் காணோம்.
டியூப் பங்க்சர் ஆனாலோ,காற்று குறைந்தாலோ அதை சரி செய்ய பட்டணத்தில் ஆட்கள் இல்லை. வாங்கி ஒரே மாதத்தில் ஒட்டடை அடைந்து அனைவர் வீட்டிலும் இருக்கும் வேக்குவம்க்ளீனர் போல ஒரு மூலையில் தேமே என்று நிற்கும். கேட்பாரில்லை.
சைக்கிளைப் போல எழுச்சியும் வீழ்ச்சியும் மன்னர்கள் கூட அடைந்திருக்க மாட்டார்கள்.
அருமையான நடை எல்லோரையும் அவரவர சைக்கிள் நினைவுகளை அசைபோட வைத்து விட்டது
ReplyDeleteகீதா ராஜன் A406
ReplyDelete