Story Time - வயலும் வாழ்வும்
வயலும் வாழ்வும்
திரு. நாராயணமூர்த்தி
Image Source : Eluthu |
"பழனி மாமா, எனக்கு சூசூ வருது. பாத்ரூம் எங்கேயிருக்கு" பெருங்கூச்சல் கொடுத்து கத்தினேன்.
அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. "அங்கேயே போடா! உனக்காக வயலில் பாத்ரூமெல்லாம் கட்ட முடியாது"
கொஞ்ச நேரம் ஆயிற்று. எனக்கு சற்றே போர் அடித்தது. நான் அப்போதுதான் சைக்கிள் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தேன். ஓட்டத்தெரியும். ஆனால் தானாக ஏறவும் தெரியாது; இறங்கவும் தெரியாது. சைக்கிள் ஆரம்பத்தில் தனியாக ஓட்டுவதற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும்.
"பழனி மாமா நான் கொஞ்சம் சைக்கிள் ஓட்டட்டுமா?"
"சரிடா,பாத்து கீழே விழாமல் ஓட்டு"
அவருக்கு அப்போது பின்விளைவுகள் தெரியவில்லை.
சைக்கிளை (என் அப்போதைய உயரத்திற்கு அந்த சைக்கிள் உயரம் மிக அதிகம்). ஒரு பாறை ஓரம் அதைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்தி அதன் மேல் ஏறி குரங்குப் பெடல் போட்டு சைக்கிளை ஓட்டத் தொடங்கி விட்டேன். நான் சைக்கிளை ஓட்ட ஓட்ட ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி வீடு வரை வந்து விட்டேன். வயலுக்கும் வீட்டுக்கும் இடையே ஐந்து மைல். (கிமீ அப்போது இல்லை)
வீடு வந்ததும் சைக்கிளை விட்டு இறங்கத் தெரியாமல் அக்ரஹாரத்தின் எட்டு வீதிகளையும் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒரு வழியாக என்னை விட இளைப்பான ஒரு பெரியவர் போய்க் கொண்டிருந்தார். அவர் மீது ஓரளவு வேகத்தைக் குறைத்து மோதி கீழே விழுந்தேன். அவரும் விழுந்தார். எனக்கு கால் முட்டியில் சற்றே சிராய்ப்பு. அவர் சமாளித்து எழுந்து அவருக்கு உரிய சக்தியானுச்சாரம் என்னைத் திட்டினார். எனக்கு ஒன்றும் காதில் விழவேயில்லை. சைக்கிளை விட்டு இறங்கியதே எனக்குப் பேரானந்தம்.
பாவம்; பழனி மாமா. வயலில் இறங்கி வேலை செய்வதால் அவருக்கு இரண்டு கால்களிலும் காலாணித் தொல்லை உண்டு. வயலில் நாள் முழுவதும் வேலை பார்த்துக் களைத்து வீட்டுக்கு வரும் நேரம் அவருடைய சைக்கிள் இல்லாமல் போனதில் அவருக்கு ஏகப்பட்ட கோபம். மேலும் நான் எங்கே விழுந்து கிடக்கிறேனோ என்ற பயம் வேறு.
நான் ரொம்ப சமர்த்தாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள சைக்கிளை ஓரம் நிறுத்தி விட்டு,உள்ளே போய் பாடப்புத்தகம் எடுத்து சத்தமாகப் படிக்க ஆரம்பித்தேன்.
அகால நேரத்தில் பையன் சொல்லாமலே படிக்கிறானென்றால் ஏதோ குறும்பு செய்திருப்பான் என்று அம்மாக்களுக்குத் தெரியாதா?
ஆனால் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு உக்கிரமாக "எங்கே அந்த மூர்த்தி" என்று கத்திகொண்டே பழனி மாமா உள்ளே வந்தார். இதற்கும் மேல் என்ன நடந்தது என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
0 comments:
Post a Comment