Welcome

to our home

Serene Rose @ Sulur

Wednesday, June 16, 2021

Story Time - சரவணா தியேட்டர்

 சரவணா தியேட்டர்

திரு. நாராயணமூர்த்தி

Image Source : South India Movie Theater

அறுபதுகளில் கோபியில் இரண்டே சினிமா கொட்டாய்கள் இருந்தன. நிஜமாலுமே கொட்டாய்கள்தான். தகரம் வேய்ந்த கூரை, முன் பாதி இடம் தரை டிக்கெட்டுகளுக்கு, பிறகு பெஞ்சு, அப்புறமாக இரண்டு வரிசைகளில் சேர்கள். கொட்டாயின் நடுவில் தடுப்பு இருக்கும். இடப்புறம் ஆண்களுக்கும் மறுபுறம் பெண்களுக்குமாக ஒதுக்கப்பட்டிருக்கும். கொட்டாய்களில் ஒன்று டிப்டாப்; மற்றது நாகையா. அவ்வப்போது ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீஸ் வந்து ஒரு ஆறு மாதங்கள் இருக்கும். இந்த முதலாளிகளுக்கு சுய கட்டுப்பாடு ஒன்று உண்டு.  ஒரு சினிமா வந்தால் பதினைந்து போஸ்டர்கள் மட்டும் அத்துடன் சேர்த்து வாங்குவார்கள். நகருக்குள் எட்டு முக்கிய இடங்களிலும், சுற்றுவட்ட கிராமங்களில் ஊருக்கு ஒன்றாக அனுமதி பெற்று ஒட்டுவார்கள். இஷ்டப்படி கண்ட இடங்களில் ஒட்டுவதில்லை. கச்சேரி மேடு, பெரியார் மைதானம், பஸ்ஸ்டாண்டு, பாரியூர் செல்லும் வழித்தொடக்கம், பெருமாள் கோயில் முக்கு இத்யாதி இடங்கள். என்ன சினிமா எதில் வந்திருக்கிறது என்று நாம்தான் அந்த இடத்திற்குப் போய் பார்க்க வேண்டும்.

அதை விட விசேஷம் டிப்டாப்பில் எப்பொழுதும் எம்ஜிஆர் படங்களும் நாகையாவில் சிவாஜி படங்களுமாக போடுவார்கள். ஆனால் என்ன, கோயம்புத்தூரில் ரிலீஸான படங்கள் எங்கள் ஊருக்கு வருவதற்குக் குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும். இருந்தாலும் அததற்குரிய மரியாதையோடு வரும்.

மற்றபடி ஜெய்சங்கர், ஜெமினி, ரவிச்சந்திரன்,அசோகன் போன்ற அடுத்த நிலை கதாநாயகர்கள் படமெல்லாம் இந்த இருவர் படங்களும் இல்லாத நேரங்களில் போடுவார்கள்.

கொட்டாய் வாசல்கள் கோலாகலமாக இருக்கும். வண்டிக்கடை நடராஜமாமா கலர் கலராய் இருக்கும் கண்ணாடிகள் ஒட்டப்பட்ட  தள்ளுவண்டியில் விதவிதமான பட்சணங்கள் செய்துகொண்டு விற்பனைக்கு வருவார். பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் அவைகள் கண்ணைக் கவரும். இரண்டாம் ஷோ ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அனேகமாக எல்லாம் விற்றுத் தீர்ந்து விடும். தரையில் அமர்ந்து வை ராஜா வை விளையாட்டுகள், அந்தந்தப் படங்களின் பாட்டுப்புத்தகங்கள், நாவல்கள், பொது இடங்களில் படிக்கக்கூடாத புத்தகங்கள் விற்பனை, மோடி மஸ்தான் ஷோக்கள் இப்படியாக அமர்க்களமாக இருக்கும்.

உள்ளே இன்னும் விசேஷம்தான். ஃபிலிம்டிவிஷன் தயாரிப்பில் வந்த நியூஸ் படங்களை அப்பொழுது எல்லா தியேட்டர்களிலும் போட்டே ஆகவேண்டும். எங்களுக்கும் அதெல்லாம் அவசியம் வேண்டும். அதில்தான் எங்களின் பொது அறிவே வளரும். பீகாரில் வறட்சி,குஜராத்தில் வெள்ளம், சீனப் பிரதமர் இந்தியா வருகை, இத்தியாதி. மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் படம் பார்க்க வேண்டும். ஒரு ரீல் முடிந்தவுடன் பாகம் 1 , பாகம் 2 என்றெல்லாம் வரும். கரண்ட் கட் ஆனாலும் பொறுமையாக இருப்போம். கரண்ட் வரும் வரை டீ,காபி, முறுக்கு, மிக்சர் வியாபாரம் உள்ளேயே களைகட்டும். என்ன.. எங்கு பார்த்தாலும் பீடியை ஊதித் தள்ளுவார்கள். ஒரே புகை மண்டலமாக இருக்கும். "புகை பிடிக்காதீர்கள்" ஸ்லைடு பெரும் புகைக்கு நடுவே மங்கலாகத் தெரியும். எப்பொழுதும் மாலைக் காட்சி நன்றாக இருக்கும். சனி, ஞாயிறுகளில் மட்டும் மேட்னி ஷோ போடுவார்கள். (பள்ளிக்கூடத்தை யாரும் கட் அடித்து விட்டு வரக்கூடாது). தெரியாமல் சனி ஞாயிறுகளில் மேட்னி ஷோ போனால் பானையில் இட்லி வேகுவது போல் எல்லோரும் வியர்வைக்குளத்தில் மூழ்கி எழுந்து வரவேண்டும். இதில் புகை மண்டலத்தில் புகுந்து வெளிவந்தால் நமக்கே நம் மீது வீசும் வாசம் தாங்க முடியாது. வீட்டுக்கு வந்தால் ரேழியிலேயே உடைமாற்றி உள்ளே வரவேண்டும். வீட்டுக்குத் தெரியாமல் சினிமா பார்க்கப் போனால் மோந்து பார்த்தே கண்டு பிடித்து விடுவார்கள். மின் விசிறிகள் இரண்டு பக்கமும் இருக்கும். இருந்தாலும் அவை கீழ்நோக்கி சுழலாமல் எதிர்ச் சுவரில் இருக்கும் விசிறியைப் பார்த்துதான் வீசும். 

65 ஆம் ஆண்டு ஊர் எல்லையில் இருக்கும் வரவேற்பு வளைவை அடுத்து சாந்தி திரையரங்கம் வந்தது. ஓரளவுக்கு அது நாகரீகமாக இருந்தது. தரை டிக்கெட் ஒழிக்கப்பட்டு அங்கும் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன.  இருந்தாலும் மாலைக் காட்சி பார்த்து வீட்டுக்கு வர இரவு நெடுநேரம் ஆகிவிடும்.

66 ஆம் ஆண்டு வந்தது எங்களின் பிரியமான சரவணா தியேட்டர். எல்லா வகுப்புகளுக்கும் சேர்கள். 

திரையின் இரண்டு புறமும் கூரையை முட்டும் அளவுக்கு அழகான பூ டிஸைன்கள். வண்ண வண்ண ஒளிக்கதிர்கள் அவற்றின் இதழ்களில் இருந்து வரும். பல்புகள் தெரியாது.

வெண்திரையை மறைத்தால் போல வண்ணத்திரை. ஒவ்வொரு காட்சிக்கும் அந்தத் திரை மேலே தூக்கப்படும்போது திரையின் அடிக்குஞ்சலங்களில் பொருத்தப்பட்ட வண்ண விளக்குகள் திரையுடன் மேலே போகும். அது சுவர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை நமக்குக் கொடுக்கும்.

பாகம் பாகமாக பார்த்த படங்களை எல்லாம் தொடர்ச்சியாகப் பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் எதிரொலி யின் அளவு தெரிவதற்காக முதல் ஒரு மாதம் இலவசமாக "எங்க வீட்டுப் பிள்ளை" படம் போட்டார்கள். ஒரு காட்சி விடாமல் எல்லா ஷோவும் பார்த்தோம். 

ஞாயிற்றுக்கிழமைகளில் காலைக் காட்சிகளாக ஆங்கிலப் படம் போடுவார்கள். ஒரு ஆங்கில சினிமா ரசிகர் கிளப் உண்டாக்கி, ஆண்டுச் சந்தாவாக தொகை ஒன்றை கட்டணமாகப் பெற்று, சென்னை சங்கீத சபாக்கள் போல சினிமா சபா ஏற்படுத்தியிருந்தார்கள். சபா உறுப்பினர்களை ஆங்கில சினிமாக்களுக்கு அனுமதித்த பிறகு இடமிருந்தால் பொது மக்களும் அனுமதிக்கப் படுவார்கள்.

இது எல்லாவற்றையும் விட மற்றும் ஒரு விசேஷம் சரவணா தியேட்டருக்கு உண்டு. இடைவேளை முடிந்தபின் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையில் போட இருக்கும் ஆங்கிலப் பட ட்ரெய்லர் காட்டுவார்கள். அது சினிமாஸ்கோப் படமாக இருந்தால் வெண்திரை  அதற்கேற்ற வகையில் தானே விரிந்து கொள்ளும். பிறகு நம்ம ஊர் படம் போடும் போது அதற்கேற்றாற்போல் தானே சுருங்கிக் கொள்ளும். எங்களுக்கெல்லாம் அது அற்புதமாகவும் அதிசயமாகவும் தோன்றும்.

பல ஆண்டுகள் கழித்து என் அறையில் இருந்து நான் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது குமாரசாமி ஆசிரியர் (அவரும் கோபிக்காரர்தான்) பதைபதைக்க வந்து"சார்,சரவணா தியேட்டரை இடித்துத் தரைமட்டம் ஆக்கிட்டாங்க" என்றார்.

என் அம்மா இறந்தபோது ஏற்பட்ட துக்கம் அன்று மீண்டும் வந்தது.

0 comments:

Post a Comment

Contact Us

Address

No 323/1B, Opp Kendriya Vidyalaya, Near Sulur Airforce Station, Kangeyampalayam, Trichy Road, Sulur, Tamil Nadu 641 401, India

Phone

+91 422 428 5555