Story Time - பேட்டும் பாலும்
பேட்டும் பாலும்
திரு. நாராயணமூர்த்தி
Image Source : DNA |
அப்பொழுதெல்லாம் கோபி வைரவிழா உயர் நிலைப் பள்ளியில் ஆண்டு இறுதியில் உடைந்த விளையாட்டுப் பொருள்களை ஏலம் விடுவார்கள். ஒண்ணார்ரூபா கொடுத்து கைப்பிடி உடைந்துபோன கிரிக்கெட் பேட் ஒன்றை எங்கள் டீமுக்காக வாங்கினோம்.
அதை எடுத்துக்கொண்டு கட்டைமாட்டு வண்டி தயாரிக்கும் ஆசாரி ஒருவரிடம் கெஞ்சி மூங்கில் ஒன்றை V வடிவத்தில் சீவி அதை அந்த பேட்டுக்குள் பசை போட்டு சொருகி ஆடாமல் இருக்க சுள்ளாணிகளை அடித்து ஒரு முழு பேட் செய்தோம்.
அதற்கு மேல் ட்வைன் நூலை உருகிய வஜ்ஜிரத்தில் நனைத்து நெருக்கி நெருக்கிச் சுற்றினோம். சூட்டுடன் சுற்றச் சுற்ற கைகளில் கொப்புளங்கள் வந்தாலும், வஜ்ஜிர நாற்றம் மூக்கைத் துளைத்தாலும் பொருட்படுத்தாமல் எடுத்துக் கொண்ட காரியத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு மூன்று நான்கு அடுக்குகள் மேலே மேலே சுற்றி உறுதி ஏற்றினோம். மூன்று நாட்கள் அதையே பார்த்துக் கொண்டு வந்தோம். பசையை நன்கு காயவிட்டோம்.
பேட் இப்போது ரெடி. கிரௌண்டில் மிகவும் சந்தோஷமாகவும், பெருமிதத்துடன் கார்க் பாலை முதலில் வேகமாக அடித்தவுடன் முழங்கை மற்றும் தோள்களில் விர்ரென்று ஷாக் அடித்தது. நிஜமான பேட்டில் கைப்பிடி அதிர்ச்சி தாங்கும் வகையில் ஏழெட்டு மரச்சிறாய்கள் ஆலையில் பசை போட்டு ஒட்டப்பட்டு, அதன் மேல் ரப்பர் உறை போட்டு வருவதால் அதற்கு லேசாக வளைந்து கொடுக்கும் தன்மை இருக்கும். பந்தை எவ்வளவு வேகமாக அடித்தாலும் ஷாக் வராது. மொத்தையான நம்ம ஊர் மூங்கிலுக்கு அப்படியான நாசூக்கெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. சபை கூடி இந்த பிரச்சினைக்குத் தீர்வு ஆலோசித்தோம். சைக்கிள் கடை அண்ணனிடம் குழாயடித்து ஒரு பழைய சைக்கிள் டியூப் வாங்கி அதனை அந்த மூங்கில் கைப்பிடியில் செருகினோம். நிஜ பேட் போலவே ஒரு தோற்றம் வந்தது.
மறுநாள் அதை விளையாடக் கொண்டு போனோம். நல்ல ஃபுல் டாஸ் பந்து வந்தது. ஓங்கி அடித்தேன். பந்தை முந்திக் கொண்டு பேட் என் கையை விட்டுப் பறந்து கொண்டிருந்தது. என் கையில் சைக்கிள் டியூப் மட்டும் இருக்கிறது. இதென்னடா புது சிக்கல். மூங்கில் மிகவும் வழுவழுப்பாக இருந்ததால் அது டியூபில் இருந்து வழுக்கிக்கொண்டு பறந்து விட்டது. மறுநாள் மூங்கிலுக்கும் வஜ்ஜிர நூல் சுற்றி க்ரிப் ஏற்படுத்தி அதன் மேல் சைக்கிள் டியூபை மீண்டும் செருகி ஒரு வழியாக பேட்டை உருவாக்கினோம். ஷாக் மிகுதியாக இருந்தாலும் நாங்கள் எங்களை அதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டோம். பந்தின் கதை இதைவிட இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
கிரிக்கெட் பந்து எப்பொழுதும் எங்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். கார்க் பால் அதற்கு ஒரு டூப்ளிகேட். கனமாகவும் இருக்கும்; கொஞ்சம் உழைக்கவும் செய்யும். நன்றாக ஸ்பின் ஆகும். காலில், கையில் பட்டால் பந்தை விட வீக்கம் பெரியதாக இருக்கும். ஆனால் அது ஈரோட்டில்தான் கிடைக்கும். பஸ் செலவு பந்தின் விலையை விட இரண்டு மடங்கு அதிகம்.
பேட்டை ஏலத்தில் எடுத்ததால் ஒரு கிழிந்த கிரிக்கெட் பந்து இனாமாகக் கிடைத்தது. அதை செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் தந்து சுற்றித் தைக்கச் சொன்னோம். இருந்தாலும் அது அல்பாயுசில் முடிந்தது.
நான்தான் அந்தக் காலத்தில் அப்துல்கலாம். இத்துப் போன கிரிக்கெட் பந்தின் உட்புறம் ஆராய்ச்சி செய்ததில் அது ஒரு கடினமான பொருள் மீது சுற்றப்பட்ட சணல் நூல் உருண்டை என்பது தெரிய வந்தது.
ஒரு சிறிய சிவப்புக் கல்லை நல்ல பழைய துணியால் சுற்றி ஒரு சிறிய உருண்டையை உருவாக்கினேன். பேட்டுக்கு வாங்கியிருந்த சைக்கிள் டியூபில் மிச்சம் ஒரு மீட்டர் அளவு இருந்தது. அதை பிளேடால் (கத்தரிக்கோல் எங்களிடம் இல்லை) வளையம் வளையமாக வெட்டினேன். அந்தக் துணி உருண்டை மேல் ஒவ்வொரு வளையமாக இழுத்து இழுத்துப் போட்டேன். கை நகத்தின் அடி தோலெல்லாம் பிசிறு பிசிறாக உரிந்து புள்ளி புள்ளியாக இரத்தம் தெரிந்தாலும் விளையாட்டு ஆர்வத்தில் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட திருப்பதி லட்டு அளவில் பெரியதாக வந்தது.
தற்போது பந்தும் ரெடி. நான் இடக்கையில் ஸ்பின் போடுவேன். அந்த டியூப் பால் 90° அளவுக்கு எதிர்பாராத விதத்தில் திரும்புகிறது. பேட்ஸ்மேனுக்குத் தலை சுற்றியது. எங்கெங்கோ திரும்பி ஸ்டம்ப்பில் பட்டுவிடும். சமையலறையில் வந்த எலி போல் பந்து எங்கே போகுமென்று பௌலருக்கே தெரியாது.
ஒருவழியாக தப்பித் தவறி பேட் பந்தில் பட்டால் மேலிருக்கும் ஒரு வளையம் அறுந்து பந்துடன் அதுவும் வரும். ஒரு வேகத்தில் பார்க்க அதுவும் பந்து போலவே இருக்கும். ஃபீல்டருக்கு எதை கேட்ச் பிடிக்கவேண்டும் என்று குழப்பம். அவுட் செய்வதில் ஏகப்பட்ட பஞ்சாயத்து.
மீண்டும் பழைய கிரிக்கெட் பந்தின் உறையை மைதானத்தில் தேடி எடுத்து செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் மன்றாடினால் எங்கள் பந்து அதற்குள் கொள்ளாத அளவு பெரிதாக இருந்தது. பத்து பதினைந்து வளையங்களைக் கழட்டி அதை உள்ளே வைத்து தைத்து இனிமேல் ரப்பர் வளையம் கழன்று வராமல் செய்தேன்.
இப்போதய குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இவைகளைக் கேட்பதற்கு முன்பே வாங்கித் தருகிறார்கள். ஆனால் விளையாட மைதானம்தான் எங்கேயும் காணோம்.
The narration is very good. Memory vehicle took me to my childhood days...thanks for sharing
ReplyDelete