Welcome

to our home

Serene Rose @ Sulur

Sunday, August 15, 2021

எது சுதந்திரம்?

எது சுதந்திரம்?

திரு. நாராயணமூர்த்தி


15/8/21 அன்று செரின் ரோஸ் அபார்ட்மெண்ட்டில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் என்னுடைய சிற்றுரை

இங்கு கூடியிருக்கும் கற்றறிந்த பெரியோர்களுக்கும் தாய்மார்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். இந்த நன்னாளில் உங்கள் முன் மேடை ஏறிப் பேச என்னைப் பணித்தார்கள். கம்பராமாயணத்தில் அவையடக்கமாக ஒரு பாடல் வரும். திருமால் படுத்திருக்கும் பாற்கடலைப் பார்த்து ஒரு பூனை அதை முழுவதுமாக நக்கிக் குடித்து விடுவேன் என்று அறியாமையால் பெருமை பாராட்டியது போல, தான் இராமாயணத்தை முழுமையாக எழுதத் துணிந்துவிட்டதாக கம்பர் சொல்லியிருப்பார். உங்கள் முன் பேச வந்த எனக்கும் அதே உணர்வு வந்தது. பிழை இருந்தால் சிறுவனான என்னை உங்கள் வீட்டுப் பிள்ளை போல மன்னித்து ஏற்கவும்.

இன்று 75 ஆவது சுதந்திர தினம். வீட்டுக்கு விழா, விரதம், பண்டிகை என்பது போல நாட்டிற்குக் கொண்டாட்ட தினங்களாக சுதந்திர தினமும், குடியரசு தினமும் இருக்கின்றன. நாட்டு மக்கள் அனைவராலும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் விழாக்களாக இவை இருக்கின்றன.

விடுதலை பெற்ற பிறகு 74 ஆண்டுகளில் நாம் எந்த அளவு முன்னேறி இருக்கிறோம் என்று ஆண்டுத் தணிக்கை தினமாக இன்றைய நாளை நாம் கொள்ளலாம்.

கடமைகளையும், பொறுப்புகளையும் முடித்து சந்ததியினரிடம் அப்பணிகளைக் கொடுத்தபின் இந்த செரின் ரோஸ் மூத்த குடிமக்கள் சமூகத்தில் நாம் அமைதியான ஆனந்த வாழ்விற்குள் நுழைந்திருக்கிறோம். எனவே நம்முடைய பார்வையில் சுதந்திரம் என்றால் என்ன என்று சிந்திக்கலாம்.

சுதந்திரம் என்பதன் முற்றான முடிவு என்பதனை "சுகமான வாழ்வு அடைதல்" என்று கொள்ளலாம்.

எது சுகம்? சேர்த்துக் கொள்வதா? இல்லை விட்டு விலகுவதா? என்ற கேள்விகளுக்கு விடைகள் இரண்டுமேதான் என்று அனுபவித்து, வாழ்ந்து, வெற்றி பெற்ற உங்களுக்கு நன்றாக தெரியும்.

எதையெல்லாம் அவசியத் தேவை;அவை இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று பெருந்தேடலுடன் தொடங்கிய நாம் கல்வி, வித்யை, தொழில், பணி, இல்லறம், நன்மக்கட்பேறு, நல்ல வீடு, வாசல், சொத்து என்று  இவையனைத்தையும் பெற்று விட்டோம். இவையனைத்தையும் அடைந்த பிறகு திரும்பிப் பார்த்தால் நாம் கடந்து வந்த பாதையையும் சாதனைகளையும் பார்த்து பெருமையையும் அடைந்து விட்டோம். இந்த சாதனைகளை அடைவதற்குள் நமக்கு எத்தனை முயற்சி, எத்தனை இழப்பு, எத்தனை கோபம், எத்தனை ஏமாற்றம், எத்தனை வருத்தம், எத்தனை அவமானம், எத்தனை சாகசம்  எல்லாம் வந்து போயின!

இப்போது அடுத்த நிலை வாழ்வுக்குள் நுழைந்த நமக்கு நம் சாதனைகளே சுமைகளாகி பாரமாக அழுத்துவதை உணர்கிறோமா? பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து கட்டிய பெரிய வீடு இப்போது வேண்டியதில்லை. அன்புடன் வளர்த்த குழந்தைகள் பெரியவர்களாகி அவர்கள் கால்களில் சுயமாக நிற்கும்போது பெருமையுடன் பார்த்து விலகுகிறோம். அதிகாரத்துடன் வலம் வந்த பணியிடத்தில் வேறு புதிய ஆட்கள் வந்தாகிவிட்டது.

இப்போதைய சுகமும் அதற்கான வழிகளும் இவைகள்தான்.

அன்பான நண்பர்கள், கூப்பிட்டவுடன் உதவிக்கு வரும் பணியாட்கள், நல்ல சத்தான உணவு, சுத்தமான சூழல், தேவையான மருத்துவ உதவி, ஆரோக்கியமான உடம்பு, விட்டுக் கொடுக்கும் சுபாவம், பொறுமை மற்றும் அமைதி, இவைகள்தான்.

மலையில் தோன்றும் ஆறு ஓடையாக நடந்து கிளை நதிகளை இணைத்துக் கொண்டு சிகரங்களில் இருந்து ஆர்ப்பரித்து அருவியாக இறங்கி, வழியில் கண்டவற்றை ஆர்ப்பாட்டமாக அடித்துக் கொண்டு பாசனத்திற்காகவும், குடிநீருக்குமாகப் பயன்பட்டு, கடலில் சங்கமிக்கும்போது அமைதியாக நகர்ந்து செல்லும். இப்போது ஆர்ப்பரித்து அருவியாய் கொட்ட மலைமுகடுகளும் இல்லை; பாசனம் செய்ய வயல்வெளிகளும் இல்லை. அதனால் அதற்கு அமைதியைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. நாமும் அவ்வாறே.

இரண்டாம் பகுதி வாழ்வில் நுழைந்திருக்கும் நமக்கு என்னென்ன தேவை என்று இராமலிங்க அடிகளார் பட்டியல் இடுகிறார்.

"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும்
பொய்ம்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்ததொழுக வேண்டும் மதமான
பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
ஷண்முகத் தெய்வ மணியே"

சுதந்திரத் திருநாளைத் தமிழில் விடுதலைத் திருநாள் என்றும் உரிமைத் திருநாள் என்றும் இரு விதத்தில் கூறுவர்.

எனவே நம்முடைய சுமையான பாரங்களில் இருந்து விடுதலை ஆவோம்; நம்முடைய அமைதியான வாழ்விற்கான உரிமைகளைத் தேடிப் பெறுவோம்.

ஜெய்ஹிந்த்! வந்தேமாதரம்!!

நன்றி; வணக்கம்.

Few moments from the 75th Independence Day celebrations at Serene Rose.  

Let's enjoy and respect our freedom.  Jai Hind !!



1 comments:

  1. How to Get Started with Casino - JDMHub
    Once 영천 출장샵 you have made your 수원 출장샵 first 경기도 출장마사지 casino deposit and you're ready to deposit and play, make your first deposit and deposit 강릉 출장샵 at a new 여수 출장마사지 casino.

    ReplyDelete

Contact Us

Address

No 323/1B, Opp Kendriya Vidyalaya, Near Sulur Airforce Station, Kangeyampalayam, Trichy Road, Sulur, Tamil Nadu 641 401, India

Phone

+91 422 428 5555