சித்திரகுள்ளனும் மர்மயோகியும் - (பாகம் 1)
திரு. கணேசன் ராமநாதன்
வாயில் இருந்த சிகரெட்டை எடுத்து அணைத்துவிட்டு தனது பார்வையை கீழிறக்கி அங்கு நின்றிருந்த அப்புவை வெறுப்புடன் பார்த்தான் பாஸ்கரன். ஆறடிக்கு மேல் உயரம். நல்ல தேக கட்டு. அமெரிக்காவில் பிறந்திருந்தால் அர்னால்ட் சுவாஷ்னேகருக்கு பதிலாக இவன் தான் ஹாலிவுட்டில் பிரபலமாயிருப்பான்.
" நேத்து மழைக்கு முளைச்ச காளான் நீ. அரை ஆழாக்கு உயரத்தில இருக்கிற உனக்கு காதல் ஒரு கேடு. சந்தியாகிட்ட போய் அவளை காதலிக்கறதா சொன்னியாமே. சந்தியா என்னோட ஆளு. உனக்கு என்ன தைரியம் இருந்தா அப்படி சொல்லியிருப்பே" என்று சொல்லிகொண்டே அப்புவை சட்டை காலரோடு தூக்கி வாயில் மீதியிருந்த சிகரெட் புகையை அவன் முகத்தில் ஊதிவிட்டு அவனை கீழே தொப் என்று போட்டான்.
" அய்யோ அம்மா" என்று அலறிக் கொண்டு பதில் எதுவும் சொல்லாமல் நடுங்கி கொண்டு எழுந்தான் அப்பு. அப்பு மூணடி உயரத்தில் பாஸ்கரனின் சர்க்கஸ் கம்பெனியில் விதூஷகனாக வேலை பார்த்தான். முன்பொரு சமயம் பாஸ்கரன் அவனிடம் " குப்பை தொட்டில அனாதையா கிடந்த உன்னை எங்க அப்பா எடுத்து வளர்த்து இந்த சர்க்கஸ் கம்பெனில உனக்கு வாழ்க்கை தந்தார். அதை நினைப்பில வச்சுக்கிட்டு நடந்துக்க" என்று தனது வெறுப்பை உமிழ்ந்திருக்கிறான். அப்புவை சர்க்கஸ் பார்வையாளர்களுக்கு பிடிக்கும். அவன் செய்யும் சேட்டைகள் சிறுவர்களிடையே பெரும் சிரிப்பையும் கைதட்டலையும் வரவழைக்கும்.
நான் ஏன் பிறந்தேன், எதற்காக வாழ்கிறேன் என்று விரக்தியாக வாழ்ந்து வந்தான் அப்பு. அபூர்வசகோதரர்கள் படத்தில் அவன் பெயரை கொண்டு அவனை மாதிரியே குள்ளனாக நடித்த கமல் காதல் தோல்வி அடைவதை பார்த்து குலுங்க குலுங்க அழுதிருக்கிறான் நம்ம அப்பு.
ஆனால், அப்புவை சந்தியாவின் அழகும் அவனிடம் அவள் காட்டிய அன்பும் காதல் என்ற மாய வலையில் வீழ்த்தியது.
" சந்தியா என்னோட ஆளு" என்று சொல்லி அவளிடம் தன் காதலை கூறியதை பாஸ்கரன் கண்டித்தது அவன் மனதை சுக்கு நூறாக்கியது.
" என்ன நான் சொன்னது காதில விழுந்ததா? சந்தியாவை மறந்துடு. உனக்கேத்த நண்டோ சிண்டோ வத்தலோ தொத்தலோ பாத்து காதலிச்சுக்கோ. இல்லைனா உன்னை உதைப்பேன். போ".
" சரிங்க அய்யா" னு சொல்லி தலையாட்டிவிட்டு அப்பு பாஸ்கரனின் கூடாரத்திலிருந்து வெளியே வந்து தனது கூடாரத்தை நோக்கி நடந்தான். அவன் மனம் வலித்தது. சந்தியாவின் சிரித்த முகம் கண்முன் வந்து அவனை வாட்டியது. வானொலியில் நேற்று அவன் கேட்ட பாடல் நினைவுக்கு வந்து அவன் சோகத்தை கூட்டியது. அவன் கேட்ட பாடல் இது தான்>