அன்பு
திரு. நாராயணமூர்த்தி
அது நடந்தது1971 ஆம் ஆண்டு. நான் திருச்சி தேசியக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் இருந்தேன்.(படித்துக் கொண்டிருந்தேன் என்று எழுத கூச்சமாக இருக்கிறது. அவ்வளவாக நான் பொய் சொல்வதில்லை).
என் நண்பர்களுடன் பாலக்கரை பிரபாத் டாக்கீஸில் சிவாஜி நடித்த"சிவந்த மண்" படத்திற்கு டிக்கெட் வாங்கக் கூண்டு வரிசையில் முண்டியடித்துக் கொண்டிருந்தோம். நல்ல மழை. கூரை அரதப்பழசு. வெளியே இருப்பதைவிட உள்ளே அதிக மழை. அத்தனையும் எங்கள் தலையில். உள்ளே சென்று சட்டையைக் கழற்றிப் பிழிந்து தலையை துவட்டி கொண்டு படத்தில் மூழ்கினோம்.
மறுநாள் காலையில் RTC லாட்ஜ் இட்லி, தோசை சாப்பிட முடியவில்லை. காய்ச்சல் வந்துவிட்டது.
எங்கள் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் எங்களின் குடும்ப நண்பர். அவர் பொன்மலைப்பட்டியில் வசித்து வந்தார். அவருக்குப் போதுமான பொருட்செல்வம் இருந்ததோ என்று தெரியாது. ஆனால் மக்கட்செல்வமும் அறிவுச் செல்வமும் ஏராளம். இரக்க குணமும் அன்பும் அவரது குடும்பச் சொத்து.
என் நண்பன் என்னை அவர் வீட்டில் விட்டு விட்டான். ஒன்பதாவது குழந்தையாக எனக்கும் அங்கே இடம் கிடைத்தது. நான் படுத்த படுக்கையாகி விட்டேன். அந்த வீட்டில் குழந்தைகள் எல்லோரும் பள்ளிக்குச் செல்லும் வயதினர். அத்தனை பேருக்கும் காலை உணவு மதிய சாப்பாடு செய்து வெளியே அனுப்புவதற்குள் அந்த அம்மாவுக்கு பெரும் பாடு. இதில் டைபாய்டு காய்ச்சலில் நான் வேறு. என் நிலைமை தெரிந்து என் அம்மாவும் அங்கே வந்து விட்டார்.
சார் கம்பன் விழா நிகழ்ச்சிகளுக்காக பல ஊர்களுக்கும் செல்வார். மூன்று விதமான பெட்டிகள் ஆயத்தமாக இருக்கும். கல்லூரியில் இருந்து வந்தவுடன் வெளியூர் செல்லும் அவசரத்துடனேயே வருவார். எந்த ஊர், எத்தனை நாள், ஒன்றும் கேட்கக்கூடாது. அவர் சிறிய பெட்டியைத் தூக்கினால் ஒரு நாள் என்றும்,அடுத்ததைத் தூக்கினால் இரண்டு நாட்கள் என்ற முறையில் அந்த அம்மா புரிந்து கொள்ள வேண்டும். போகும் போது அவரிடம் செலவுக்கு ரூபாய் கொடுத்து விடுவார். வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருக்கும் போது, ஆசிரியர் இல்லாத ஐந்தாம் வகுப்பறையில் வரும் இரைச்சல் இருக்கும்.
ஒரு வாரத்தில் எனக்கு சற்றே சரியாகி இருந்தது. வெளியில் இருந்து வந்த சார் ஒரு பெரிய ஆப்பிளை என்னிடம் தந்து" இது நாராயணமூர்த்திக்கு மட்டுமே" என்று சொல்லி விட்டுப் போனார். காய்ச்சலில் இருந்து அப்போதுதான் விடுபட்டிருந்த எனக்கு நல்ல பசி. போர்வையை தலையோடு போர்த்திக்கொண்டு ஆப்பிளைக் கடிக்க ஆரம்பித்தேன். பாதியிலேயே வயிறு நிரம்பியது. சிரமப்பட்டு ஒரு வழியாக முழுவதையும் சாப்பிட்டு விட்டேன். சற்று நேரத்தில் அவர் மனைவி "நாராயணமூர்த்தி, அந்த ஆப்பிளைக் கொடு. நறுக்கித் தருகிறேன்" என்றார்கள். காரைக்கால் அம்மையார் போல நான் திரு திரு என்று முழித்து " மாமா எனக்கே எனக்கு, என்று சொன்னதால் நானே முழுவதையும் சாப்பிட்டு விட்டேன்" என்றேன். "அடப்பயலே, பெரியவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். எட்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் பங்கு போட்டுக் கொள்ள வேண்டாமோ? இப்படியா யாருக்கும் தராமல் இருப்பது" என்று இயல்பாகச் சொன்னார்கள்.
இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணம் நிஜமாகவே அப்போதுதான் புரிந்தது.